ஓமனை வீழ்த்தி யுஏஇ அபார வெற்றி!
ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று ஓமன் - யுஏஇ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அல் அம்ரிடில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின் சோயிப் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 47.2 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களைச் சேர்த்தது. யுஏஇ அணி தரப்பில் பசில் ஹமீத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணியில் வாசீம் முகமது 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சிராக் சுரி - சுண்டாங்கபொயில் ரிஸ்வான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிராக் சுரி 43 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சுண்டாங்கபொயில் ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதமூலம் யுஏஇ அணி 45.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 76 ரன்களைச் சேர்த்த சுண்டாங்கபொயில் ரிஸ்வான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.