UAE vs NZ, 2nd T20I: மார்க் சாப்மேன் அரைசதம்; நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று துபாயில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - சாத் பௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டிம் செய்ஃபெர்ட் 7 ரன்களிலும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னிலும், தனே கிளெவர் ரன்கல் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாத் பௌஸும் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மார்க் சாப்மேன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் சாப்மேனும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. யுஏஇ தரப்பில் அயான் அஃப்சல் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது ஜவதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.