சாப்மேன், சாண்ட்னார் அதிரடியில் விண்டீஸ் வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!

Updated: Thu, Nov 06 2025 20:15 IST
Image Source: Google

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே 16 ரன்களுக்கும், டிம் ராபின்சன் 39 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவும் 11 ரன்களில் நடையைக் கட்டினார். 

பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மார்க் சாப்மேன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 28 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 18 ரன்களையும் சேர்த்தனர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெஃபெர்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இணைந்த அலிக் அதானஸ் - ஷாய் ஹோப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதனாஸ் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 33 ரன்களையும், ஷாய் ஹோப் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 24 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அகீம் அகஸ்டே, ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ரோவ்மன் பாவெல் - ரொமாரியோ ஷெஃபெர்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரொமாரியோ ஷெஃபெர்ட் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 34 ரன்களையும், ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். மேற்கொண்டு இறுதிவரை போராடிய மேத்யூ ஃபோர்டும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்தார்.

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை