உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதன்பின் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களை மட்டுமே எடுத்த ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரையும் வென்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியாலின் புதுபிக்கப்பட்ட பாட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.
அதேசமயம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது 54.17 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் முன்னதாக நான்காம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியானது ஒரு இடம் பின் தங்கிய 50 புள்ளிகளுட்ன் இப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி 40.79 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்திலும், வங்கதேச அணி தற்போது 30.56 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் உள்ள நிலையில், வெஸ் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்திலும் நீடித்து வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இதில் எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.