யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூயார்க் வாரியர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது டெக்ஸாஸ் சார்ஜர்ஸ்!
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆறு அணிகளைக் கொண்டு பத்து ஓவர் டி10 லீக் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் விளையாடின. இதில் நான்கு அணிகளுக்கு ராபின் உத்தப்பா, கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் கேப்டன்களாக இருந்தார்கள். இந்த நான்கு அணிகளுமே இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அமெரிக்க இந்திய ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இன்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான நியூயார்க் வாரியர்ஸ் அணியும், பென் டக் தலைமையிலான டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. டெக்ஸாஸ் சார்ஜர் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
அந்த அணியில் தில்சன் 18, ரிச்சர்ட் லெவி 17 ரன்கள் எடுத்தார்கள். இறுதிக்கட்டத்தில் ஜோனதன் கார்ட்டர் 17 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் கொண்டுவர, நியூயார்க் வாரியர்ஸ் அணி 10 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்ஸாஸ் சார்ஜர் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஹபீஸ் 17 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்து அருமையான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு துணையாக கேப்டன் பென் டக் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இந்த அணி எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால் அதன்பின் பந்து வீச வந்த சோகைல் கான் ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றிவிட்டார். கீழ் வரிசையில் அவர் நான்கு வீரர்களை வெளியேற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவருக்கு இரண்டு விக்கெட் கைவசம் இருக்க ஒன்பது ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
இந்த ஓவரை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி வீச வந்தார், அவர் முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் கொடுக்க ஆட்டம் சமநிலைக்கு வந்தது. கடைசி இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை சாஹித் அஃப்ரிடி டை செய்தார்.
இதற்கடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 13 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணி 15 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டியில் வென்று, யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய சோகைல் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். முகமது ஹபீஸ் தொடர் நாயகன் விருது பெற்றார்.