USA vs IRE: அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா!

Updated: Thu, Dec 23 2021 11:37 IST
Image Source: Google

அமெரிக்காவில் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. மேலும் அமெரிக்காவில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக இது அமைந்துள்ளது. 

அதன்படி இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

ஆரம்பத்திலே அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சுஷாந்த் மொதானி - கஜானந்த் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கஜானந்த் சிங் 65 ரன்களையும், சுஷாந்த் 50 ரன்களையும் சேர்த்தனர். 

பின்னர் இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - லோர்கன் டக்கர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. இதில் டக்கர் அரைசதம் விளாசினார். 

பின் 31 ரன்களில் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, 57 ரன்னில் டக்கரும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அமெரிக்க அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி, டெஸ்ட் அங்கீகாரம் கொண்ட அணியை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை