‘தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன்' - ஹர்திக் பாண்டியா

Updated: Sat, Jun 11 2022 18:09 IST
Image Source: Google

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்க அணி. தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 76 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தார்கள். 

அதன்பின் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 11-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி. 

ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் மில்லரும் வாண் டர் டுசெனும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். டுசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதையடுத்து இரண்டாவது டி20 ஆட்டம் கட்டாக் நகரில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டுக்காக விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். எதற்காக நான் கடுமையாக உழைத்தேனோ அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டுக்காக நன்றாக விளையாடுவது முக்கியம். 

ஐபிஎல் போட்டியை வெல்வதும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதும் பெரிய விஷயமாக இருந்தது. ஏனெனில் பலர் எங்கள் அணி மீது சந்தேகம் கொண்டார்கள். பல கேள்விகளை எழுப்பினார்கள். நான் விளையாடாமல் இருந்த ஆறு மாத காலங்களிலும் மீண்டும் விளையாடுவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை யாரும் அறிய மாட்டார்கள். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். 

இதனால் மாலை 4 மணிக்கு மீண்டும் பயிற்சி மேற்கொள்ள முடியும். சரியான முறையில் ஓய்வு எடுத்துக்கொள்வதற்காக இரவு 9.30 மணிக்கே தூங்கச் சென்றுவிடுவேன். இதுபோன்று பல தியாகங்கள் செய்தேன். ஐபிஎல் போட்டிக்கு முன்பே நான் போராடிய தருணங்கள் அவை. உழைப்புக்கான முடிவுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையாக உழைத்தேன். 

அது எனக்கான முடிவுகளைத் தந்துள்ளது. இதனால் தான் நான் ஏதாவதொரு நாளில் சிறப்பாக விளையாடினால் குதூகலிப்பதில்லை. அந்த நாளில் சிறப்பாக விளையாடுவதை விடவும் பயணமே முக்கியம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை