பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியின்போது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் ஷமார் ஜோசவ் பந்துவீச்சில் தலையில் அடிபட்டது. அப்போது அவருக்கு ரத்தகசிவு ஏற்படவே, உடனடியாக மைதானத்திலிருந்து கவாஜா வெளியேறி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தி தொடர்பாளர், “உஸ்மான் கவாஜாவுக்கு முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்தன. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் அவருக்கு சாதகமாக கிடைத்துள்ளது. மேலும் அவருக்கு தாமதமாக ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை கவனித்து வருகிறோம். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக நாளை அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நாளைய பரிசோதனை முடிவுகளும் கவாஜாவுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.