இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!

Updated: Fri, Oct 01 2021 15:48 IST
“Venkatesh Iyer can be the all-rounder India needs”: Sunil Gavaskar (Image Source: Google)

இந்த நவீன கால கிரிக்கெட்டில் தனிப்பட்ட பேட்ஸ்மேன் அல்லது தனிப்பட்ட பவுலர் என்பதை விட பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் திறமை வாய்ந்த ஆல்ரவுண்டர்களைதான் எந்த ஒரு அணியும் விரும்புகிறது.

குறிப்பாக தற்போது ரசிகர்களை எளிதாக மயக்கும் டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரில் பங்கு அளப்பரியதாகும். சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அதிக ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ளது.

இது தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளும் திறமையான ஆல்ரவுண்டர்களை வைத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் பற்றாக்குறைதான். தற்போது ஸ்பின்- பேட்டிங்கில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கின்றனர். 

ஆனால் வேகப்பந்து வீச்சு-பேட்டிங் ஆல்ரவுண்டர் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. விஜய் சங்கரை பயன்படுத்தி பார்த்தும் பயனில்லை. ஷர்துல் தாக்கூர் இதேபோல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்வாரா என்று நம்ப முடியாது.

வேகப்பந்து வீச்சு-பேட்டிங் ஆல்ரவுண்டராக இருக்கும் ஹார்திக் பாண்ட்யாவும் தற்போது பந்து வீசவில்லை. பேட்டிங்கிலும் சொதப்புகிறார். இப்படி இந்தியா ஆல்ரவுண்டருக்காக ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் 'நான் இருக்கிறேன்' என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நிரூபித்து காண்பித்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா அணியில் ஆடி வரும் வெங்கடேஷ் தொடக்க வீரராக இந்த ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்.

இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஒரு அரை சதத்துடன் 126 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர மிதவேக பந்துவீச்சாளரான இவர் 2 விக்கெட்டும் எடுத்துள்ளார். சிறப்பாக பவுலிங் செய்து ஓவருக்கு 6.80 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஷாட்டுகளை ஆடுகிறார். பவுலிங்கில் சிக்கனத்தை காண்பிப்பதால் இவரை இந்தியா சிறந்த ஆல்ரவுண்டராக பயன்படுத்தி கொள்ளலாம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டர் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “வெங்கடேஷ் ஐயர். இந்தியா தேடும் ஆல்-ரவுண்டராக இருக்கக்கூடிய ஒரு வீரரை கொல்கத்தா கண்டுபிடித்துள்ளது. அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஆனால் அவர் யார்க்கரைச் சரியாக போடுகிறார். பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகின்றனர். ஒரு பேட்ஸ்மேனாக, அவர் தரமாக விளையாடுகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக அடிக்கிறார். அனைத்து இடது கை பேட்ஸ்மேன்கள் செய்வது போல் அவர் ஆஃப்-சைடு வழியாக பந்தை அழகாக அடித்து ஆடுகிறார்'' என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை