இங்கு பல ஜாம்பவான்கள் உள்ளனர் ஆனால் தோனி போல இயல்பாக யாரும் இல்லை - வெங்கடேஷ் ஐயர்!

Updated: Sat, Jul 01 2023 13:55 IST
Venkatesh Iyer Shared Ms Dhoni Master Plan To Dismiss Him In Ipl (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனிதான். ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு விதமான உலகக்கோப்பைகளையும் ஒரு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற ஒரே கேப்டனாகவும் அவர் உள்ளார். அதே சமயத்தில் அவருடைய அமைதியான குணத்திற்காகவும், யாரும் யோசிக்காத அதிரடியான திட்டத்திற்காகவும் இந்தியா தாண்டி உலக அளவில் பலராலும் விரும்பப்படக்கூடிய விளையாட்டு வீரராக அவர் இருக்கிறார்.

அவர் கிரிக்கெட்டை புரிந்து கொண்டிருக்கிற விதம் மற்ற யாரையும் விட மிக மிக எளிமையானது. அவர் அதிலிருந்தே ஆட்டத்தை அணுகி என்ன தேவை என்ன தேவையில்லை என்று மிகச் சரியாக உணர்ந்து போட்டியை மிக வெற்றிகரமாக முடிக்க கூடியவர்.அவர் ஸ்டெம்புகளுக்கு பின்னால் நிற்கிறார் என்றால் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையும் உதவியும் அவரிடம் இருந்து கிடைக்கும். அதே சமயத்தில் எதிரணி பேட்ஸ்மேன் களுக்கு எப்பொழுதும் ஒரு இனம் புரியாத நெருக்கடி இருக்கும். 

இந்நிலையில் தோனியின் திட்டங்கள் குறித்து பேசியுள்ள வெங்கடேஷ் ஐயர், “நான் பேட்டிங் செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு ஷார்ட் விளையாடி தேர்டு மேனில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தேன். அதற்குப் பிறகு நான் திரும்பிப் பார்த்த பொழுது, என்னை கேட்ச் பிடித்தவர் அந்த ஏரியாவில் தவறான இடத்தில் நின்று இருந்தார். அவர் நிற்க வேண்டிய இடம் அது கிடையாது. பின்பு தான் உணர்ந்தேன் அது மகேந்திர சிங் தோனியின் வேலை என்று.

போட்டிக்கு பின் நான் அவரிடம் ஏன் அப்படி பீல்டிங் வைத்தீர்கள் என்று கேட்டேன். அவர் எனது பேட்டில் பட்டு பந்து எந்த கோணத்தில் செல்கிறது என்று கணித்ததாகக் கூறினார். இதுவெல்லாம் நான் யோசித்து பார்க்காத ஒரு விஷயம். கிரிக்கெட் என்பதே கோணங்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுதான். அதை அவர் மிக விரைவாக புரிந்து கொள்வதுதான் அவருடைய பலம் என்று நான் நினைக்கிறேன்.

இன்னொரு முறை கொல்கத்தாவுக்கு விளையாடும் பொழுது நானும் இன்னொரு வீரரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு ஷார்ட் தேர்ட் மேனும், கவர் திசையிலும் ஆப்சைடில் இரண்டு பீல்டர்கள் இருந்தார்கள். அதுவரை எல்லாமே சரியாக இருந்தது. ஆனால் உடனே மகேந்திர சிங் தோனி ஒரு பீல்டரை அழைத்து மறுபக்கம் நிற்க வைத்தார்.

என்னுடன் விளையாடியவர் மிகச் சரியாக அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்பொழுதுதான் நான் யோசித்தேன் இதை மூன்று நான்கு பந்துகள் கழித்து கூட அவர் செய்திருக்க முடியும். ஆனால் எப்படி உடனே குறிப்பிட்ட அதே பந்தில் அந்த வேலையை அவர் செய்கிறார் என்று ஆச்சரியப்பட்டு போனேன். இங்கு பல ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் அவர் போல இயல்பாக யாரும் இல்லாதது தான் அவரை தனித்து காட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை