ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏற்பாடுகள்!
வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை வியாகாம் மற்றும் டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றின.
கடந்த ஆண்டு வரை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த நிலையில், ரிலையன்ஸின் வியாகாம் உள்ளே நுழைந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதுவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.23,758 கோடிக்கு வியாகாம் ஏலத்தில் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஹாட்ஸ்டாரை மிஞ்சும் அளவிற்கு புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தில் குறிப்பிட்ட அளவிலான ஆங்கிளில் கேமராக்கள் பொருத்தப்படும். அதனை உடனடியாக எடிட் செய்து ஒளிபரப்புவார்கள்.
ஆனால் இனி மைதானத்தின் பல ஆங்கிளிலும் கேமராக்களை வைத்து, பார்வையாளர்கள், தங்களுக்கு எந்த ஆங்கிளில் வேண்டுமோ அந்த ஆங்கிளுக்கு மாற்றி பார்க்கும் வசதி கொண்டு வரப்படவுள்ளது.
போட்டியின் நேரலையில் "வாட்ச் பார்ட்டி" வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது நேரலையின் போது, பார்வையாளர்கள் தங்களது நண்பர்களுடன் ஆன்லைனில் சேர்ந்து போட்டியை பார்த்து ரசிக்கலாம். அப்போது மெசேஜ் செய்துக்கொள்வது, பேசிக்கொள்வது, பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் அதில் இடம்பெறும்.
தற்போது வரை ஐபிஎல் தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனம் ஹெச்டி ஃபார்மெட்டில் ஒளிபரப்பு செய்து வந்தது. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 4கே அல்ட்ரா ஹெச்டி முறையில் வீடியோவை பார்க்கும் வசதியை ரசிகர்களுக்கு கொண்டு வரவுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.