ஆஷஸ் தொடர்: கம்மின்ஸின் செயலிற்கு குவியும் பாரட்டுகள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஹோபர்ட்டில் கடைசியாக நடந்த 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை 3ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக் கொண்டது.
இந்த வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து, மது பாட்டில்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டேவிட் வார்னர், ஹாரிஸ், ஸ்டார்க் ஆகியோர் மது பாட்டிலைத் திறக்க முயன்றபோது, மது தனது மதத்துக்கு ஆகாது என்பதை உணர்ந்த கவாஜா மேடையிலிருந்து கீழே இறங்கினார்.
இதனால் புகைப்படம் எடுக்கும்போது கவாஜா இல்லை, அவரைத் தேடியபோது, அவர் கீழே அமர்ந்திருப்பதை கேப்டன் கம்மின்ஸ் கவனித்தார். அவரை மேலே வாருங்கள் என்று கம்மின்ஸ் அழைத்தார்.
அப்போது, உடன் இருந்த வீரர்கள் கவாஜாவின் மதத்தைப் பற்றித் தெரிவித்து, இஸ்லாத் மதத்துக்கு மது விரோதமானது. அது இருக்கும் இடத்துக்கு கவாஜா வரமாட்டார் எனத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட கம்மின்ஸ், மது பாட்டில் திறப்பதை சகவீரர்களிடம் நிறுத்துமாறு கூறி, உஸ்மான் கவாஜாவை மேடைக்கு அழைத்தார். அவரையும் உடன் அமரவைத்து புகைப்படம் எடுத்தபின், கவாஜா மேடையிலிருந்து கீழே இறங்கியபின் மது பாட்டிலைத் திறந்தனர்.
மாற்று மதத்தினருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் நாகரிகம், பெருந்தன்மை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உஸ்மான் கவாஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “இந்த வீடியோ உங்களைக் காண்பிக்கவில்லை, என்னுடைய அணியினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. என்ன நடக்கிறது எனத் தெரியாது. வழக்கமான மதுக் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு என்னையும் அழைத்தனர். விளையாட்டில் உள்ள உள்ளடக்கம் மற்றும் நமது மதிப்புகள் மிக முக்கியம். நாங்கள் சரியான திசையில் செல்வது போல் உணர்கிறேன்” என்று புகழ்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கம்மின்ஸ் கூறுகையில் “ஆஸ்திரேலிய அணியில் பல்வேறுபட்ட வீரர்கள் இருக்கிறோம். எதையாவது கொண்டாட வேண்டும் என விரும்பினால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கள் வீரர்கள் அருமையாக நடந்து கொண்டார்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்கள். அதனால்தான் புகைப்பட செஷனில் அனைவரும் இருக்க விரும்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.