விஜய் ஹசாரே கோப்பை: முதல் பட்டத்தை வென்றது ஹிமாச்சல பிரதேசம்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - ஹிமாச்சல பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 116 ரன்களையும், இந்திரஜித் 88 ரன்களையும் சேர்த்தனர். ஹிமாச்சல் அணி தரப்பில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஹிமாச்சல் அணிக்கு சுபம் அரோரா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் 131 பந்துகளை எதிர்கொண்ட அரோரா 13 பவுண்டரி, 1 சிக்சர் என 136 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு துணையாக அமித் குமார் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இறுதியில் கேப்டன் ரிஷி தவான் 42 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதற்கிடையில் ஹிமாச்சல் அணி 299 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மோசமான வான்நிலை காரணமாக ஆட்டதடைப்பட்டது. இதனால் ஹிமாச்சல் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஹிமாச்சல பிரதேச அணி உள்ளூர் போட்டிகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதித்துள்ளது. இப்போட்டியில் சதமடித்து,இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுபம் அரோரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.