விஜய் ஹசாரே: இறுதி போட்டிக்கு மும்பை, உத்தரப் பிரதேசம் முன்னேற்றம்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இத்தொடரின் அரையிறுதிக்கு மும்பை, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய அணிகள் முன்னேறியிருந்தன.
மும்பை - கர்நாடகா
இதில் மும்பை - கர்நாடாக அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி, மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் மும்பை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 122 பந்துகளில் 7 சிக்சர், 17 பவுண்டரிகளை விளாசி 165 ரன்களை குவித்தார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடகா அணியில் தேவ்தத் படிகல், சரத் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். இதனால் 42.2 ஓவர்களிலேயே கர்நாடக அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
உத்தரப் பிரதேசம் - குஜராத்
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் உத்தரப் பிரதேசம் அணி, குஜராத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்களை மட்டும் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஹெட் படேல் 60 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தரப் பிரதேசம் அணி அக்ஷீப்தீப் சிங்கின் அதிரடியான ஆட்டத்தால் 42.4 ஓவர்களிலேயே எட்டியது. இதன் மூலம் உத்தரப் பிரதேசம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி, விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியது.