ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
இந்தியாவின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் தமிழக அணி பி பிரிவில் கர்நாடகா, உ.பி. ரயில்வே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் கேப்டனாகவும், வாசிங்டன் சுந்தர் துணை கேப்டனாகவும் உள்ளனர்.
இதில் தமிழ்நாடு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், அணியின் அடையாளமாக விளங்கிய தினேஷ் கார்த்திக் இம்முறை ரஞ்சி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திற்காக விளையாடிய வீரரின் பெயர் அணியில் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது 36 வயதாகும் தினேஷ் கார்த்திக் நடந்த முடிந்த விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசி நல்ல ஃபார்மில் இருந்தார். அப்படி இருக்கையில், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. ஒரு வேலை இனி டெஸ்ட் கிரிக்கெட் ஆட முடியாது என்று கார்த்திக் முடிவு எடுத்தாரா இல்லை, தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளாரா என்று தெரியவில்லை.
இதே போன்று தமிழக அணியின் வேகப்பந்துவீச்சாளரான நடராஜனும் அணியில் இடம்பெறவில்லை. நடராஜன் காயத்திலிரந்த குணமடையாமல் இருப்பதால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. 4 வார ஓய்வுக்கு பிறகு அவர் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு அணி: விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பாபா இந்தரஜித், பாபா அப்ரஜித், ஜெகதீசன், ஷாரூக் கான், சாய் சுதர்சன், ரஞ்சன் பால், சூரியபிரகாஷ், கௌசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தீப் வாரியர், எம். முகமது, சிலம்பரசன், சரவணகுமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், கவின்.