‘டி20 உலகக்கோப்பையில் நீதான் ஓப்பனர்’ விராட் கோலியின் வாக்கால் மகிழ்ச்சியில் இஷான் கிஷான்!

Updated: Sat, Oct 09 2021 15:04 IST
Virat bhai told me I am selected as an opener in T20 WC squad: Ishan Kishan
Image Source: Google

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இந்த தொடர் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் 7ஆவது டி20 உலக கோப்பை தொடரானது அங்கேயே நடைபெற உள்ளது. 

இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது என்றே கூறலாம். அதன்படி கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இழந்து தவித்து வந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ராகுல், ரோஹித், விராட் கோலி ஆகியோரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் தற்போது பலமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் இஷான் கிஷன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடைய அதிரடி காரணமாக மும்பை அணி 235 ரன்கள் குவித்தது.

இந்த போட்டி முடிந்து பேட்டி பேசிய அவர், “இந்த போட்டியில் நாங்கள் ரன்கள் அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கினோம். அதன்படி முதல் பந்தில் இருந்தே நல்ல ஷாட்களை விளையாட வேண்டும் என்று நினைத்தோம். மேலும் 250 – 260 ரன்கள் வரை ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று களம் இறங்கி விளையாடினோம். அந்த வகையில் இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் தற்போது நான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சி. உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளதால் நல்ல டச்சில் இருப்பது மிகவும் அவசியம். நான் பேட்டிங்கில் சொதப்பிய போது பும்ராவிடம் நிறைய ஆலோசனைகளை பெற்றேன். அதுமட்டுமின்றி ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா ஆகியோரும் எனது பேட்டிங் குறித்து சில அறிவுரைகளை வழங்கினர். 

நான் விராட் கோலி இடமும் நிறைய பேசினேன். அப்போது அவர், நீ தான் உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாட போகிறாய், உன்னை நாங்கள் தொடக்க வீரராகத் தான் தேர்வு செய்துள்ளோம், அதற்காக தயாராக இரு என்று கூறினார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

எனக்கும் தொடக்க வீரராக களமிறங்குவது மிகவும் பிடிக்கும். விராட் கோலியும் தற்போது என்னை தொடக்க வீரராக உறுதி செய்துள்ளதால் நிச்சயம் உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். மேலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் எந்த சூழ்நிலையிலும் களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நான் தற்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை