இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா விராட் கோலி?
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
இந்நிலையில், ஐபிஎல்லில் விராட் கோலி எப்படி ஆடுகிறார், ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுகிறாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி. அவரது சராசரி வெறும் 16. இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 38வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், அவருக்கு சிறிய பிரேக் தேவை என்றும், அதனால் ஐபிஎல்லில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய டி20 அணியில் விராட் கோலியின் இடமே சந்தேகமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியை அணியில் எடுத்து, அவரது இதே மோசமான ஃபார்ம் தொடரும் நிலையில், அது டி20 உலக கோப்பையில் இந்திய அணியை பாதிக்கும் என்பதால், அவரது ஃபார்ம் குறித்து தேர்வாளர்கள் கவலையில் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில்,“இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார் கோலி. ஆனால் அவரது தற்போதைய ஃபார்ம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களுக்கு கவலையளிக்கிறது. அணி தேர்வு விஷயத்தில் பிசிசிஐயின் குறுக்கீடு இருக்காது. கண்டிப்பாக தேர்வாளர்கள் தான் அணியை தேர்வு செய்வார்கள்.
விராட் கோலியை தேர்வு செய்வதா வேண்டாமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களது கருத்தை தெரிவிக்க முடியாது. உண்மையாகவே, விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தேர்வாளர்களுக்கு கவலையளிக்கிறது” என்று தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.