ரஞ்சி கோப்பையில் விளையாடும் விராட் கோலி?
இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது பெரும் சர்ச்சையாக மாறியது. முக்கியமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி - கோலி இடையே இருந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரியவந்தது.
இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என நினைத்த சூழலில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விராட் கோலி தற்போது கேப்டன்சி பொறுப்பு இன்றி முழு நேர பேட்ஸ்மேனாக கவனம் செலுத்தி வருகிறார். எனினும் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற இலங்கை தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கங்குலி, விராட் கோலி இனி ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி தன்னை நிரூபித்தால் தான் இந்திய அணியில் வாய்ப்பு என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் ஜூன் மாதத்தில் ரஞ்சிக்கோப்பை தொடரின் 2ஆவது பகுதியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இருந்து விலகி தான் டெல்லி அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் களமிறங்கவுள்ளார் கோலி. இதில் சதமடித்த பிறகு தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இருந்து தப்பிக்க ஒரே வழியாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. கோலி மட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி விட்டால், நேரடியாக தென் ஆப்பிரிக்க தொடருக்கு தேர்வாகிவிடுவார். அப்படி இல்லையென்றால், இனி அவரை இந்திய ஜெர்ஸியில் பார்ப்பது கடினம். ஏற்கனவே புஜாரா, ரகானே போன்ற வீரர்களும் ரஞ்சிக்கோப்பைக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.