ஐபிஎல் 2022: மும்பை வெற்றியைக் கொண்டாடிய ஆர்சிபி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதனை தீர்மானிக்கும் போட்டியாக நேற்றைய மும்பை - டெல்லி ஆட்டம் அமைந்தது. பெங்களூரு அணி 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி இருந்தது.
இதனால் 14 புள்ளிகளுடன் இருந்த டெல்லி அணி நல்ல ரன் ரேட் உடன் இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதேவேளை டெல்லி தோற்றால், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் சூழலில் போட்டியானது நடைபெற்றது. இதனால் இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெற்றி பெற வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக தவமிருந்து காத்திருந்தது பெங்களூரு அணி.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், டெல்லி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. அதே வேளையில், பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.
இந்தப் போட்டியை ஆர்சிபி அணியினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். ஒட்டுமொத்த அணியும் போட்டியை பார்த்த வீடியோவை ஆர்சிபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதும் விராட் கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொல்கத்தாவுக்கு புறப்பட்டு செல்வதாக விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டார்.
வரும் மே 24ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று-1ல் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த குஜராத், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
வரும் மே 25ஆம் தேதி நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த லக்னோ, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மே 27ஆம் தேதி நடக்கவுள்ள தகுதிச் சுற்று-2ல் விளையாட தகுதி பெறும். இதில் தகுதிச் சுற்று-1ல் தோற்ற அணியை சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த மே 29ஆம் தேதி அன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.