ஐபிஎல் 2022: விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்த சேவாக்!

Updated: Wed, May 25 2022 15:57 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகளிலும் நடந்து முடிந்து, தற்போது பிளே ஆஃப் சுற்றுகள் துவங்கிவிட்டன.பிளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க மொத்தம் 10 அணிகள் முட்டிமோதிய நிலையில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎலில் பங்கேற்று வருவது ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள்தான். ராஜஸ்தான் கூட துவக்க சீசனில் கோப்பையை வென்றுவிட்டது. ஆனால், ஆர்சிபியோ இன்னமும் கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது.

அனில் கும்ளே, டேனியில் விக்டோரி போன்ற ஜாம்பவான்கள் இந்த அணியை வழிநடத்தியும் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை கேப்டனாக இருந்த விராட் கோலி, தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தும் கெய்ல், டிவிலியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

கோலி அடிக்கடி பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருந்ததுதான், கோப்பை வெல்ல முடியாததற்கு முக்கிய காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் 15ஆவது சீசனில் கேப்டன்ஸி பொறுப்பை ஏற்ற டூ பிளஸி, அணியில் பெரிய மாற்றங்களை எதுவும் செய்யாமல் வழிநடத்தி, தற்போது பிளே ஆஃப் சுற்றுவரை அணியை வழிநடத்திக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், கோலியின் கடந்த கால கேப்டன்ஸி குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய விரேந்திர சேவாக், “புதிய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், புதிய கேப்டன் டூ பிளஸி இருவரும் பெங்களூர் அணியின் பழைய திட்டத்தை மாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் 2-3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட தவறினால், அந்த வீரரை கோலி உடனே நீக்கியதை பார்த்தோம். ஆனால் பங்கர், டூ பிளஸி இருவரும் நிலையான பிளேயிங் லெவன் அணியை கட்டமைத்துள்ளனர்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “கடந்த காலங்களில் ஆர்சிபிக்கு அதிர்ஷ்டங்கள் கை கொடுக்காததால், தோல்வியடைந்ததை பார்த்தோம். இம்முறை பிளே ஆஃப் செல்ல டெல்லியை தோற்கடித்து மும்பை பெரும் உதவி செய்துள்ளது. இந்த அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த சீசன்களில் ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொதப்பினார்கள். இம்முறை பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இது அந்த அணிக்கு நல்ல விஷயம்தான்” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது குவாலிஃபைர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை