ஐபிஎல் 2022: விராட் கோலி ஃபார்ம் குறித்து விமர்சித்த சேவாக்!

Updated: Sat, May 28 2022 22:38 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் 2ஆவது நாக் அவுட் போட்டி வரை வந்த ஆர்சிபி அணி, ராஜஸ்தானிடம் தோற்று வெளியேறியது. முக்கியமான இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 157 ரன்கள் மட்டுமே அடிக்க, 158 ரன்கள் என்ற இலக்கை பட்லரின் சதத்தின் உதவியுடன் எளிதாக அடித்து ராஜஸ்தான் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.

இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் விராட் கோலி 7 ரன்கள் மட்டுமே அடித்தார். விராட் கோலிக்காக இந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள் சிலரே கூட விரும்பினர்.  ஆனால் அதற்கு கோலி நன்றாக பேட்டிங் ஆட வேண்டும் அல்லவா? அதை கோலி செய்யவில்லை.

இந்த சீசனில் 16 போட்டிகளில் பேட்டிங் ஆடிய விராட் கோலி வெறும் 116 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். முக்கியமான நாக் அவுட் போட்டியிலும் 7 ரன் மட்டுமே அடித்தார்.

இந்நிலையில், இந்த சீசனில் விராட் கோலி நிறைய தவறுகளை செய்ததாக வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சேவாக், “ஃபார்மில் இல்லாதபோது, ஒவ்வொரு பந்தையும் பேட்டில் நன்றாக ஆட முயற்சிக்க வேண்டும். அப்படி ஆடினால் தான் நம்பிக்கை வரும். ஆனால் ஃபார்மில் இல்லாத வீரர்கள் பந்தை விரட்டிச்சென்று ஆடுவார்கள். அதைத்தான் கோலியும் செய்தார்.  சில நேரங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் அதிர்ஷ்டம் கோலிக்கு கைகொடுக்கவில்லை. இப்போது இருப்பது நமக்கு தெரிந்த விராட் கோலி கிடையாது. வேறு ஏதோ கோலி.

விராட் கோலிஅவரது கெரியர் முழுக்க செய்த தவறுகளை விட, இந்த சீசனில் அதிகமான தவறுகளை செய்தார். ஸ்கோர் செய்யமுடியாமல் கஷ்டப்படும்போது வித்தியாசமாக யோசித்து வித்தியாசமான முறையில் விக்கெட்டை இழக்க நேரிடும். அதுதான் கோலிக்கு நடந்தது.  இந்த சீசனில் எப்படியெல்லாம் அவுட்டாக முடியுமோ அப்படியெல்லாம் அவுட்டானார் கோலி. கோலி அவரது ரசிகர்களையும் ஆர்சிபி ரசிகர்களையும் ஏமாற்றினார்” என்று சேவாக் விமர்சித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை