இஷான் கிஷானுக்கு ஓபனிங் சான்ஸ் குடுங்க - விவிஎஸ் லக்ஷ்மண்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.
இந்நிலையில் இன்று சூப்பர் 12-சுற்றில் தங்களது கடைசி போட்டியை இந்திய அணி விளையாட இருக்கிறது. இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
ஏற்கனவே குரூப்-2 பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் இன்றைய இந்திய அணியின் ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரில் விளையாடாத சில வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் இன்றைய போட்டியில் ஒருசில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மண் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“இஷான் கிஷன் திறமையான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. பவர் பிளே ஓவர்களில் மிக அதிரடியாக விளையாடும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே ரோகித் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடி வருவதால் அவரை அணியில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read: T20 World Cup 2021
இருப்பினும் இன்றைய போட்டியின் முடிவினால் எந்த ஒரு பாதகமும் இந்திய அணிக்கு ஏற்படாது என்பதனால் இன்றைய போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.