டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!
டி20 கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு, ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் என்றழைக்கப்படும் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. மேலும் பேட்ஸ்மேன்கள் பந்தை கையில் இருந்து கணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எத்தனை கோடி என்றாலும் கொட்டிக் கொடுக்க டி20 அணிகள் தயாராக இருக்கின்றன.
இந்த வகையில் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சில் உலகெங்கும் நடைபெறும் டி20 லீகில் கலந்துகொண்டு பெரிய தொகைக்கு விளையாடும் அளவுக்கு இலங்கையை சேர்ந்த வநிந்து ஹசரங்கா இருக்கிறார். இவரது பந்துவீச்சு கையிலிருந்து எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இவருடைய கூக்லி மிகவும் சிறப்பான ஒன்று. எனவே இதன் காரணமாக இவருக்கு மதிப்பு மிக அதிகம்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இவருக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணி நிர்வாகங்களும் மிகக் கடுமையாக போட்டியிட்டன. இவருக்கான ஏலத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இறுதியில் 10.75 கோடிக்கு இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
மேலும் இவர் உலகெங்கும் நடைபெறும் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார். இலங்கை மாதிரியான சிறிய கிரிக்கெட் வாரியங்களில் கிடைக்கும் வருமானத்தை விட, பல மடங்கு வருமானத்தை இவரை போன்ற வீரர்கள் வெளியில் நடக்கும் டி20 லீக்குகளின் மூலமாக சம்பாதித்து வருகிறார்கள். மேலும் இவர் பேட்டிங்கும் செய்யக்கூடியவர் என்பதால் இவருக்கு சந்தை மதிப்பு அதிகம்.
இவர் இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். ஆனால் 48 ஒருநாள் போட்டிகளிலும் 58 டி20 போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியிருக்கிறார். இதில் முறையே 67 மற்றும் 91 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
தற்பொழுது இவர் அதிரடியாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இவர் அதிகப்படியான வெளியில் நடக்கும் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். மேலும் அணியில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா போன்ற சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. எனவே இவர் அதிரடியாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இவரது இந்த முடிவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து “அவரது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மேலும் எங்களது வெள்ளைப்பந்து கிரிக்கெட் திட்டத்தில் அவர் ஒரு முக்கிய அங்கமாக இருப்பார் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம் ” என்று கூறப்பட்டு இருக்கிறது. பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவரின் இந்த முடிவு சரியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.