இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் - பாபர் ஆசாம் விருப்பம்!

Updated: Wed, Feb 22 2023 19:17 IST
"Want to win this year's ICC World Cup 2023 scheduled in India" - Babar Azam (Image Source: Google)

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்வதேச களத்தில் அசத்தி வருபவர் பாபர் ஆசாம். 28 வயதான அவர் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,813 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 679 ரன்கள் குவித்திருந்தார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அதன் காரணமாக 2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை அவர் வென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணியை வழிநடத்திவரும் பாபர் ஆசாம், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்காக என்னவென்றால், அது நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவது மற்றும் பெஷாவர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும்தான். அதேபோல நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் எனவும் விரும்புகிறேன். எனக்கு எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும்.

மாடர்ன் டே கிரிக்கெட்டில் நாம் சிலவற்றை வித்தியாசமாக முயற்சித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் போக்கிற்கு ஏற்ற வகையில் நம்மை தகவமைக்க முடியும். நான் சில புதிய ஷாட்களை முயற்சித்து வருகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளில் அதை அப்ளை செய்து விளையாடுவேன். அதே நேரத்தில் எனது வழக்கமான பாணியில் எனது ஆட்டத்தை தொடருவேன்” என தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 1992இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது. பாபர், இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராசா சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை