ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு உதவுவது எனது வேலை - யுஸ்வேந்திர சஹால்!

Updated: Tue, Apr 19 2022 12:43 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரோன் பின்ச் 58 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 85 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், சாஹல் வீசிய போட்டியின் 17வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் உள்பட மொத்தம் நான்கு வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.

18வது ஓவரில் உமேஷ் யாதவ் 18 ரன்கள் எடுத்தாலும், கடைசி இரண்டு ஓவரை வீசிய பிரசீத் கிருஷ்ணா மற்றும் ஓபட் மெக்காய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் 19.4 ஓவரில் 210 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய யுஸ்வேந்திர சாஹல் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய யுஸ்வேந்திர சாஹல், அணியின் வெற்றிக்காக விக்கெட் வீழ்த்தி கொடுக்க வேண்டியது தான் தனது வேலை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து யுஸ்வேந்திர சாஹல் பேசுகையில், “போட்டியின் முடிவை மாற்ற விக்கெட் வீழ்த்துவது தான் எனது வேலையாக இருந்தது. பயிற்சியாளர்களிடமும், கேப்டனிடமும் பேசினேன். கூக்ளி பந்துகள் வீசலாம் என தோன்றியது, ஆனால் தேவையற்ற ரிஸ்க் எடுக்க விரும்பாததால் என்னால் எதை சரியாக செய்ய முடியுமே அதையே முயற்சிப்போம் என தீர்மானித்தேன். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல் கூக்ளி பந்தை சரியாக வீசி அதன் மூலம் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை எடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை