தோனிக்கு பதில் எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என்று நினைத்தேன் - யுவராஜ் ஓபன் டாக்!
கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்டெடுக்கவும் தொடக்க டி20 உலகக் கோப்பைக்கான கேப்டனாக புதிதாக ஒருவரை அறிவிக்கவும் பிசிசிஐ முடிவெடுத்திருந்தது. அச்சமயத்தில் தோனிக்கு முன்பாக தனக்கு கேப்டன்சி அளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “இந்தியா அப்போதுதான் 50 ஓவர் உலகக் கோப்பை படுதோல்வியைச் சந்திருந்தது. இந்திய கிரிக்கெட்டின் குழப்பம் நிறைந்த காலக்கட்டம் அது. அதன் பிறகு 2 மாதகால இங்கிலாந்து பயணம். இடையே தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்துக்கு ஒரு மாதகால பயணம். இதோடு தொடக்க டி20 உலகக்கோப்பையும் இருந்தது.
அதாவது தொடர்ச்சியாக 4 மாதங்கள் இந்தியாவிலிருந்து வெளியே இருக்க வேண்டும். எனவே அப்போது மூத்த வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருக்க நினைத்தார்கள். டி20 உலகக்கோப்பைத் தொடரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் எனக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தேன், பரவலாக அப்படிதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.தோனி கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது.
யார் கேப்டன் என்பதெல்லாம் கவலையில்லை. நம் ஆதரவு யாராக இருந்தாலும் உண்டு, அது ராகுல் திராவிடாக இருந்தாலும் கங்குலியாக இருந்தாலும் சரி, அணிக்கான வீரராக இருக்கவே விரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.