அவர் கொடுத்த நம்பிக்கை தான் எனது அதிரடிக்கு காரணம் - ரிலே ரோஸோவ்!

Updated: Wed, Oct 05 2022 20:39 IST
Image Source: Google

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது 2 -1 என்ற கணக்கில் இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளும் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டியானது இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இந்த இமாலய ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமான ரைலி ரூஸோவ் திகழ்ந்தார்.

மொத்தம் 48 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்து டி காக் 68 ரன்களை குவித்திருந்தார். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியால் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைலி ரூஸோவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்தது குறித்து பேசுகையில், “இதுபோன்று அடுத்தடுத்து மோசமான ஆட்டத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல ஆட்டத்திற்கு திரும்புவது கிரிக்கெட்-டில் மிகவும் கடினம்.

ஆனால் இன்று என்னுடைய இரவு என்பதால் அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுத்தது. அதோடு நான் பேட்டிங் செய்ய வரும்போது டீ காக்குடன் நிறைய பேசினேன். அவர் என்னிடம் வந்து நீங்கள் தான் இன்று அதிக ரன்கள் குவிப்பீர்கள். நிச்சயம் அது உங்களால் முடியும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ஒரு உலகத்தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு ஆட்டத்தை அளித்தது மகிழ்ச்சி.

அதோடு எங்களது அணியின் வெற்றிக்கு இன்று நான் பங்காற்றியுள்ளது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. களத்தில் நின்று பேட்டிங் செய்யும்போது நிறைய விடயங்களை டி காக்குடன் பேசினேன். அவரிடம் பேசிய சில விஷயங்கள் என்னுள் இருந்த திறமையை வெளிக்கொணர்ந்தன. இன்றைய போட்டியில் நான் அசத்தலாக விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை