சாம்சன் தனது வாய்ப்பை வீணடித்துவிட்டார் - வாசீம் ஜாஃபர்!

Updated: Tue, Mar 01 2022 13:21 IST
Image Source: Google

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற்ற இந்த தொடரின் 3 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

அத்துடன் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த டி20 தொடரில் ஏற்கனவே 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா தற்போது பெற்ற வெற்றியால் கடைசியாக நடந்த 3 அடுத்தடுத்த டி20 தொடர்களில் ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றியை பெற்று அசத்தியது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்த டி20 தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட வேளையில் வாய்ப்பில்லாமல் நீண்ட நாட்கள் தவிர்த்து வந்த வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களுக்கு பின் இத்தொடரில் இந்தியாவிற்காக விளையாடினார்.

குறிப்பாக முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஓய்வெடுத்த காரணத்தால் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 2ஆவது போட்டியில் மிடில் ஆர்டரில் 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் தொடக்க வீரராக விளையாடிய இஷன் கிஷன் காயம் அடைந்ததால் 3வது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக விளையாடிய அவர் 12 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்தார். 

மொத்தத்தில் இந்த தொடரில் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 57 ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய அளவில் ரன்கள் குவிக்காமல் சுமாரான பேட்டிங்கை மட்டுமே வெளிப்படுத்தினார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை சஞ்சு சாம்சன் மிக சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி பேசிய அவர் “சாம்சன் கண்டிப்பாக நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான கடைசி 2 போட்டியில் 3வது விக்கெட் கீப்பராக அல்லது பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரால் என்ன முடியும் என்பதை ஓரளவு காட்டினார். ஆனால் அவரின் நிலைமையில் இருக்கும் இதர வீரர்கள் பயன்படுத்திய அளவுக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை. அதனால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு பங்காற்ற அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை