சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!

Updated: Thu, Nov 17 2022 09:29 IST
Image Source: Google

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளும் பரபரப்புகளும் தற்போது இருந்தே தொடங்கியுள்ளன. அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தன.

இதில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவைன் பிராவோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்து ஆச்சரியம் தந்தது. மேலும் தோனி தான் இந்த சீசனில் அணியை வழிநடத்துவார் என உறுதியளித்தது.

தற்போது 41 வயதாகும் எம்எஸ் தோனி சென்னையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் எனக் கூறியிருந்தார். அதன்படி அடுத்தாண்டு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிவிட்டு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் சென்றுவிட்டால் அடுத்தக்கேப்டன் யார் என்ற பேச்சும் சுற்றி வருகிறது. ஜடேஜா அதற்கு சரிவரமாட்டார் என்பது கடந்தாண்டே தெரிந்துவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியிருக்கிறார். அதில், “தோனி சென்றுவிட்டால் விக்கெட் கீப்பர் என்ற பொறுப்பை டெவான் கான்வேவிடம் ஒப்படைத்துவிடுவார்கள். அதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டவர் தான் அவர். இதே போல அடுத்த கேப்டனாக நிச்சயம் ருதுராஜ் கெயிக்வாட் தான் இருப்பார். அது தோனியே எடுத்த முடிவாகும்.

ருதுராஜ் கெயிக்வாட் மிகவும் இளம் வீரர் ஆவார். அவருக்கு ஏற்கனவே மகாராஷ்டிரா அணியை வழிநடத்திய நல்ல அனுபவம் உள்ளது. தோனியுடன் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அவருக்கு இந்தாண்டு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு, அவரை கேப்டனாக நியமிக்க தயார் செய்வார்கள்.

இதே போல ஷிவம் தூபே, முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சுப்ரான்ஷூ சேனாதிபதி ஆகியோர் இன்னும் சரிவர வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இது தோனி விளையாடும் கடைசி தொடர் என்பதால் அவருடன் பணியாற்றி நல்ல அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை