ஐபிஎல் 2022: 36 வயதிலும் அதிரடியில் மிரட்டும் தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் பெங்களூரும், பஞ்சாப் அணிகளும் மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்தது. டு பிளெஸில் முதல் மாயங் அகர்வால் வரை இரு அணிகளும் பேட்டிங்கில் மிரட்டி ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினர்.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார். 36 வயதான தினேஷ் கார்த்திக், இதுவரை ஐபிஎல் தொடரில் தனது சொந்த ஊரை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ அணிக்காக விளையாடியது இல்லை.
இதனால் இந்த ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை கைப்பற்ற பெங்களுரு அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கடுமையாக போட்டி நிகழ்ந்தது. கடைசியாக 5.5 கோடிக்கு பெங்களூரு அணி கார்த்திக்கை எடுத்தது.
தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றினார். இந்த நிலையில் தமக்கு இன்னும் அதிரடியாக விளையாட தெரியும் என்பதை கார்த்திக் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் உலகிற்கு காட்டினார்.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 3 பவுண்டரி, 3 சிக்சர் என் பறக்கவிட்டு, 14 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். தினேஷ் கார்த்திக்கின் ஷாட்களை பார்க்கும் போது இவர் ஏன் இந்திய அணியின் தற்போது இல்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கார்த்திக் பேட்டிங் மட்டுமல்ல விக்கெட் கீப்பிங்கிலும் கலக்கினார்.
ஆட்டத்தின் 5.3வது ஓவரில் சாபாஷ் அகமது வீசிய போது, அதனை பஞ்சாப் அணியின் ஷிகர் தவான், ஸ்விப் செய்ய முயன்றார். அப்போது பந்து எகிற, அதனை துரத்தி சென்ற தினேஷ் கார்த்திக் பறந்து பந்தை பிடித்தார். இருப்பினும் தரையில் விழும் போது பந்தும் அவரது கையை விட்டு சென்றது. கார்த்திக்கின் இந்த செயலை பார்த்து சக வீரர்கள் அவரை பாராட்டினார். 36 வயதில் தினேஷ் கார்த்திக் கில்லி போல் உள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.