கேட்ச்சை தவற விட்ட இந்திய வீரர்கள்; பாடம் கற்பித்த பால் பாய் - வைரல் காணொளி!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா பங்கேற்க உள்ளது. போட்டிகள் இன்றும், அக்டோபர் 9,11 ஆகிய தேதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோவில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஓபனர் ஜனிமேன் மலான் 22, டெம்பா பவுமா 8 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து மார்க்கரமும் 0 ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் அரை சதம் அடித்து விளையாடி வந்தார்கள்.
அப்போது 38ஆவது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்துகளில் கிளான், டேவிட் மில்லர் இருவரும் அடித்த கேட்ச்களை சிராஜ், ருதுராஜ் இருவரும் பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதே ஓவரில் மில்லர் அடித்த சிக்ஸரை மிட் விக்கெட்டில் நின்றிருந்த பால் பாய் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால், பார்வையாளர்கள் அவரை பாராட்டும் விதமாக கை தட்ட ஆரம்பித்தார்கள்.
இந்த சம்பவம் இந்திய வீரர்களை தலைகுனிய வைத்தது. இந்திய வீரர்கள் ஓரே ஓவரில் அடுத்தடுத்து கேட்ச்களை விட்ட நிலையில், பால் பாய் அசால்ட்டாக அதே ஓவரில் பிடித்த கேட்ச் குறித்த சம்பவத்தை நெட்டிசன்களும் இணையத்தில் பகிர்ந்து, அந்த பால் பாய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இந்திய அணியின் மோசமான பீல்டிங்கை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கிளாசன் 74, மில்லர் 75 இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இதனால், தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 249/4 ரன்களை குவித்தது.