ரன் எடுக்க மறுத்த தோனி; தனி ஒருவனான இரண்டு ரன்களுக்கு ஓடிய மிட்செல் - வைரல் காணொளி!

Updated: Wed, May 01 2024 22:37 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

அதன்பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வின் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்த நிலையில் 62 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் மகேந்திர சிங் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. 

 

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரை எதிர்கொண்ட சிஎஸ்கே வீரர் தோனி, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கவர் திசையில் அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் ரன்களைச் சேர்க்க வேண்டி மறுப்பக்கம் ஓடிவரவே, தோனி அவரை திரும்பிச் செல்லுமாறு கூறினார். இதனைச் சற்றும் எதிர்பாராத மிட்செல், ஸ்டிரைக்கர் திசையிலிருந்து மீண்டும் நான் ஸ்டிரைக்கர் திசைக்கு சென்றார். 

அதன்படி டேரில் மிட்செல் எதிர்திசை பேட்டர் இல்லாமலேயே தனி ஒருவனாக இரண்டு ரன்களுக்கு ஓடினார். இருப்பினும் இது விதிகளில் இல்லாத காரணத்தால் அதற்கு எந்த ரன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டேரில் மிட்செல் தனி ஒருவனாக இரண்டு ரன்களுக்கு ஓடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::