ஆஷஸ் தொடர்: இணையத்தில் வைரலாகும் வார்னரின் செயல்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸை மூன்றே ரன்களுக்கு வெளியேற்றினார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இதனால் 4 ரன்களுக்கெல்லாம் ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதன்பின்னர் கூட்டு சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஸ்சாக்னே ஜோடி 2வது விக்கெட்டிற்கு 150 ரன்களை சேர்த்து அசத்தியது. ஆனால் இதில் ஒரு சோக விஷயம் என்னவென்றால், டேவிட் வார்னர் சதத்தை தவறவிட்டது தான். 167 பந்துகளில் 95 ரன்களை குவித்த அவர் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் நடையைகட்டினார். இதனால் சதம் தவறிவிட்டதே என ரசிகர்கள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் டேவிட் வார்னர் கவலையுடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் இருந்தது. மைதானத்தை விட்டு அவர் வெளியேறிய போது, முதல் வரிசையில் நின்றிருந்த சிறுவர்கள் சிலர் வார்னருக்காக உற்சாக கோஷத்தை எழுப்பினர். இதனை கண்ட வார்னர், தான் அணிந்து விளையாடிய கிளவுஸை ஒரு சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார்.
மேலும் இதுகுறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர், சதத்திற்கு அருகில் வந்து அவுட்டாவது இத்தொடரில் இது 2ஆவது முறையாகும்.