IND vs SA: ஸ்டப்ஸுக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த தீபக் சஹார் - வைரல் காணொளி!
இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியின்போது முதல் இன்னிங்சில் பந்துவீசிய இந்திய வீரர் தீபக் சாஹர், தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு மன்கட் அவுட் எச்சரிக்கை செய்தது வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 16ஆவது ஓவரின் முதல் பந்தை தீபக் சாஹர் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கர் எல்லையில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிக தூரம் சென்றார்.
இதை கவனித்த தீபக் சாஹர் அவரை மன்கட் அவுட் செய்யப்போவது போல் டிராமா செய்தார். ஆனால், அவரை அவுட் ஆக்காமல் எச்சரிக்கையோடு விட்டுவைத்தார். இந்த சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்த இந்திய கேப்டன் ரோகித் உட்பட பலரும் புன்னகையுடன் இந்த சுவாரஸ்யத்தை ரசித்தனர்.
சில தினங்கள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 36 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இங்கிலாந்து அணியின் கைவசம் இருந்தது. அப்போது பிரேயா டேவிஸும், சார்லோட் டீனும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் தீப்தி சர்மா ஆட்டத்தின் 44ஆவது ஓவரை வீசும்போது அதை டேவிஸ் எதிர்கொண்டார். நான்-ஸ்டிரைக்கர் முனையில் சார்லோட் டீன் இருந்தார். 44ஆவது ஓவரின் 3-வது பந்தை தீப்தி சர்மா வீச வந்தபோது சார்லோட் டீன், கிரீஸில் இருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து அவரை தீப்தி சர்மா, மன்கட்அவுட் முறையில் ரன் அவுட் செய்துவிட்டார். இதற்கு நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றது. எதிர்பாராத இந்த ரன்-அவுட்டால் சார்லோட் டீன், கண்ணீர் விட்டவாறே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், தற்போது தீபக் சஹார் மன்கட் அவுட் எச்சரிக்கை விடுத்ததும் வைரலாகி வருகிறது.