அந்தரத்தில் பறந்து பந்தை பிடித்த ஹர்லீன் தியோல் - குவியும் பாராட்டுகள்!
நார்த்ஹாம்டனில் நடைபெற்ற இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்தார்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்திய மகளிர் அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19ஆவது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்ஸர் அடிக்க முயன்றார். பந்து சிக்ஸர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார்.
கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன். உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இப்படி ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்த இந்திய அணி வீராங்கனைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும், கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.