ஜான் சீனாவாக மாறிய காவலர்; வியப்பில் விராட் கோலி!
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை ஆர்சிபி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 208 என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்களும் அரங்கேறின. ரஜத் பட்டிதாரின் அதிவேக சதம், டூப்ளசிஸின் அட்டகாசமான கேட்ச், கே.எல்.ராகுலின் விக்கெட், ஹர்ஷல் பட்டேலின் பவுலிங் என அடுத்தடுத்த திருப்பங்களால் போட்டி கலைக்கட்டியது. இந்நிலையில் யாரும் அறியாத மற்றொரு சுவாரஸ்ய விஷயமும் அரங்கேறியது.
ஆட்டத்தின் 20வது ஓவரில் கடைசி 4 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சமீரா சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் பரபரப்பான கட்டத்தில் 4வது பந்தை வீசுவதில் திடீரென தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் கம்பிகளை தாண்டி களத்திற்குள் திடீரென ஒரு இளைஞர் குதித்துவிட்டார்.
பவுண்டரி எல்லையில் விராட் கோலி ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். இதனால் அவரை நோக்கி அந்த இளைஞர் வேகமாக ஓடினார். அப்போது அவரை விரட்டி வந்த காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி, அந்த நபரை திடீரென அலேக்காக "ஜான் சீனா" பாணியில் தூக்கினார். மேலும் தோளில் சுமந்தபடியே வேக வேகமாக களத்தில் இருந்து வெளியேறினார்.
இதனை மிகவும் அருகில் இருந்து பார்த்து வியந்த விராட் கோலி, ஆச்சரியத்தில் வாயில் கைவைத்து கீழேயே உட்கார்ந்துவிட்டார். இப்படி ஒரு போலீசாரா என அவர் வியப்பில் ஆழ்ந்தார். பாதுகாப்புக்காக காவலர் ஒருவர் ஜான் சீனாவாக மாறிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.