பாண்டிச்சேரி டி10 லீக்: 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட்ட வீரர்!

Updated: Sat, Jun 04 2022 16:05 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் அடுத்த வடிவமாக பார்க்கப்படும் டி10 லீக் எனப்படும் 10 ஓவர்களைக் கொண்ட போட்டிகள் உலகம் முழுவதும் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்தவகையில் தற்போது பாண்டிச்சேரி டி10 லீக் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இதில் ராயல்ஸ் மற்றும் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி ரகுபதியின் அதிரடியான தொடக்கத்தின் மூலம் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக ரகுபதி 30 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்சர்களை விளாசி 84 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதியடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி முதல் ஐந்து ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களை மட்டுமே எடுத்த பரிதாபமான நிலையில் இருந்தது.

அதன்பின் 4ஆவது விக்கெட்டில் களமிறங்கிய கிருஷ்ணா பாண்டே, நிதீஷ் தாக்கூர் வீசிய 6ஆவது ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார். இதற்கு முன்னதாக யுவராஜ் சிங், கிரென் பொல்லார்ட் என ஒரு சிலரே ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டியுள்ளனர்.

அந்தவரிசையில் கிருஷ்ணா பாண்டேவும் தற்போது இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிருஷ்ணா பாண்டே 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என விளாசி 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

இறுதியில் பேட்ரியாட்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்து வெறும் 4 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.

ஆனாலும் கிருஷ்ணா பாண்டே ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை