ஐபிஎல் 2022: இமாலய சிக்சரை பறக்கவிட்ட லிவிங்ஸ்டோன்; வைரல் காணொளி!
15ஆவது ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறிய போதிலும், இளம் வீரரான சாய் சுதர்சன் இறுதி வரை போராடி 65 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, பாரிஸ்டோ 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த ஷிகர் தவான் – பனுகா ராஜபக்சே ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் குவித்தது.
பனுகா ராஜபக்சே 40 ரன்களில் விக்கெட்டை இழந்தபிறகு, களத்திற்கு வந்த அதிரடி நாயகன் லிவிங்ஸ்டன் முதல் 4 பந்துகளில் மட்டும் பொறுமையை கையாண்டுவிட்டு, முகமது ஷமி வீசிய போட்டியின் 16ஆவது ஓவரில் 3 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய அந்த ஓவரில் 28 ரன்கள் குவித்ததன் மூலம் 16ஆவது ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 62 ரன்களுடனும், லிவிங்ஸ்டன் 10 பந்தில் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதிலும் அவர் விளாசிய ஒரு சிக்சர் 117 மீட்டருக்கு பறந்தது. இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர். தற்போது இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.