எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.
பேட்டிங், பவுலிங்கில் பாண்டியா அசத்தியது பெரிய விஷயமல்ல. ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பாண்டியா, இந்த சீசனில் முதிர்ச்சியுடனும் பக்குவத்துடனும் தெளிவான கேப்டன்சி செய்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், கேரக்டர் என அனைத்திலுமே ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டார்.
அதன்விளைவாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா, அபாரமாக பேட்டிங் விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மீண்டும் பாண்டியா தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில், தோனியின் அட்வைஸ் தான், தான் சிறந்த வீரராக ஜொலிக்க காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, “எனது கிரிக்கெட் கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனியிடம், நீங்கள்(தோனி) எப்படி அழுத்தமான சூழலிலும் நெருக்கடியை உணராமல் ஆடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தோனி, உன் ஸ்கோர் மீது கவனம் செலுத்தாமல், அணிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டுமே யோசித்து அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார். நான் இன்றைக்கு இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு தோனியின் அந்த அட்வைஸ் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.