மாலன் விளாசிய இமாலய சிக்சர்; புதருக்குள் பந்தை தேடிய நெதர்லாந்து வீரர்கள் - காணொளி!
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டீல்வன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் 122 ரன்களை விளாசினார். அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மலானும், ஜோஸ் பட்லரும் அதிரடியாக ஆடியதுடன் சதமடித்தும் விளாசினர்.
இதில் டேவிட் மாலன் 125 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் ஜோடி சேர்ந்த பட்லர் - லிவிங்ஸ்டோன் இணை அதிரடியாகவிளையாடிய பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 498 ரன்களைச் சேர்த்தது.
இந்த நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் விளாசிய சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே போய் விழுந்தது. அப்போது, அந்த பந்தை நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்களும், மைதான ஊழியர்களும் தேடினர். நமது ஊரில் கண்மாய் அல்லது காடு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் போது பந்தை புதருக்குள் அடித்துவிட்டு இரு அணி வீரர்களும் தேடுவது வழக்கம்.
அதைப்போலவே, 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் புதருக்குள் சென்று பந்தை தேடியது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் வியப்பையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.