தூபேவை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் செய்ய வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டதோடு, பெரிய இலக்கையும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சென்னை அணி சார்பாக வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், 2வது ஓவரை வீசிய நலக்கண்டே பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சென்னை ரசிகர்களுகு இன்ப அதிர்ச்சியாக அந்த பந்து நோ-பால் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்த இரு பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி ருதுராஜ் பதிலடி கொடுத்தார்.
இதனிடையே 4 ஓவர்கள் கடந்தும் விக்கெட் எடுக்க முடியாததால், உடனடியாக ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுக்கவில்லை. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்திருந்தது. ஒருபக்கம் கான்வே நிதானம் காத்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் வெளுத்து வாங்க தொடங்கினார்.
இதனால் 36 பந்துகளில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 4ஆவது அரைசதத்தையும் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசிய போது, கான்வே வெறும் 17 ரன்களே சேர்த்திருந்தார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதத்திற்கு பின் அதிரடியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே முதலிரண்டு பந்துகளில் பொறுமைக்காத்த நிலையில், நூர் அஹ்மத் பந்துவீச்சில் சிக்சர் விளாச முயற்சித்து பந்தை தவறவிட்டார். அது நேராக ஸ்டம்பை பதம்பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் ஷிவம் தூபே க்ளீன் போல்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.