ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்த முகமது வாசீம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 26ஆவது லீக் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கடைசி போட்டி இதுவாகும். இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபீக் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில், ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 13 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளார். அடுத்து வந்த இஃப்திகார் அகமது 21 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து பாபர் ஆசாம் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார்.
அதன்பின் இறுதியாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷதாப் கான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மேலும், இருவரும் நிதானமாக விளையாடியதன் மூலமாக பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது. இதில் ஷதாப் கான் 43 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சவுத் சகீல் 52 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து முகமது நவாஸ் 24 ரன்கள் சேர்த்தார். இவருக்கு அடுத்து பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசீம் ஜூனியர், தப்ரைஸ் ஷம்சி வீசிய 44.5ஆவது பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக சிக்ஸர் விளாசினார். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர்கள், சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு தோனி வந்துவிட்டார் என புகழ்ந்து பேசியுள்ளனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளும், கெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்நிலையில் முகமது வாசீம் ஜூனியர் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.