ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!

Updated: Thu, Apr 07 2022 09:53 IST
WATCH: Pat Cummins Brings Up Fastest IPL Fifty; Thrashes Daniel Sams For 35 Runs In An Over (Image Source: Google)

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா விளையாடிய முதல் 3 போட்டிகளில் கம்மின்ஸ் களமிறங்கவில்லை.

பாகிஸ்தானில் இருந்து திரும்பி, நைட் ரைடர்ஸ் அணியினருடன் இணைந்த அவர், நேற்று மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் விளையாடினார். 4 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும், 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பந்துவீச்சுதான் பேட் கம்மின்ஸின் முக்கியமான ரோல் என்றாலும், இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கிலும் வலுசேர்க்கும் ஆற்றல் பெற்றவர். அதற்கான சான்றுதான், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் காட்டிய அதிரடி.

சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிய கம்மின்ஸ், 14 பந்துகளிலேயே அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின் சாதனையை சமன் செய்தார். கே.எல்.ராகுல் இதற்கு முன் 2018ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

15 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன் 56 ரன்கள் குவித்தார் பேட் கம்மின்ஸ். பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலம் மட்டும் 52 ரன்கள் சேர்த்துள்ளார்.

 

நடப்புத் தொடரில் தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ள கம்மின்ஸ், இதற்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார். 37 போட்டிகளில் பேட்டிங் செய்திருக்கும் அவர், பவுண்டரிகளைக் காட்டிலும் சிக்ஸர்களே அதிகம் விளாசியுள்ளார்.

அதேபோல் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது மட்டுமின்றி மொத்தமாக 5 விருதுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை