ENG vs IND, 2nd ODI: லார்ட்ஸில் சாதனைப் படைத்த ரீஸ் டாப்ளி!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லண்டன் லார்ட்ஸில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் அடிக்க, 247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 100 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், ரீஸ் டாப்ளியின் சிறப்பான பவுலிங் தான். அபாரமாக பந்துவீசிய ரீஸ் டாப்ளி, 9.5 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதனால் தான் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய ரீஸ் டாப்ளி தான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து பந்துவீச்சாளரின் சிறந்த பெர்ஃபாமன்ஸ் இதுதான்.
இதற்கு முன் 2005ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பால் காலிங்வுட் 31 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியிருந்ததே, இதுவரை இங்கிலாந்து பவுலர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு பெர்ஃபாமன்ஸாக இருந்தது. 17 ஆண்டுகால அந்த ரெக்கார்டை தகர்த்து, அதைவிட சிறந்த பவுலிங்கை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் ரீஸ் டாப்ளி.