கடைசி போட்டியிலும் கோலோச்சிய ராஸ் டெஸ்லர்!
நியூசிலாந்து அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ராஸ் டெய்லர். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே ராஸ் டெய்லர் அறிவித்திருந்தார். தற்போது 37 வயதான ராஸ் டைலர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,655 ரன்கள் குவித்துள்ளார்.
அது மட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் ராஸ் டைலர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ராஸ் டெய்லருக்கு வெற்றியைப் பரிசளித்தது.
மேலும் இப்போட்டியில் பந்துவீசிய ராஸ் டெய்லர், வங்கதேச அணியின் எபடோட் ஹொசைனின் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்ன வென்றால் ராஸ் டெய்லர் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிராக பந்துவீசினார். அதன்பிறகு தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து பந்துவீசி விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார்.
தனது கடைசி டெஸ்டில் விக்கெட்டை வீழ்த்திய ராஸ் டெய்லரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.