PAK vs AUS: மைதானத்தை பரபரப்பாக்கிய வார்னர், ஷாஹீன்!
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற ராவல்பிண்டி, கராச்சி மைதானங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், முடிவுகள் எட்டப்படவில்லை. டிரா ஆனது.
இந்நிலையில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி தற்போது லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி 391/10 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 91 ரன்களை சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 268/10 ரன்களை சேர்த்து, பின்தங்கியது. அப்துல்லா ஷாபிக் 81 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11/0 ரன்கள் எடுத்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மொத்தம் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. கவாஜா, வார்னர் ஆகியோர் உள்ளனர்.
அந்த மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஷஹீன் அஃப்ரீடி ஒரு ஷார்ட் பாலாக வீசினார். ஆனால், வார்னர் அந்த பந்தை தனது கால்களுக்குக் கீழே இறக்கி தனது விக்கெட்டை காப்பாற்றினார். அப்போது ஷஹீன் வார்னரை நோக்கி வர, வார்னரும் அவரை நோக்கி நடந்தார். இருவரும் நெருக்கமாக நின்றதால் எதோ நடக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இறுதியில் வார்னர் சிரித்துவிட, அவரைப் பார்த்து ஷஹீனும் சிரித்துவிட்டார். மூன்றாவது நாள் அந்த பந்தோடு நிறைவடைந்தது. அப்போது ரசிகர்களின் கூச்சலால் அரங்கமே அதிர்ந்தது. இதனைப் பார்த்த பாட் கம்மின்ஸ் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே உடை மாற்றும் அறையில் சிரித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் களத்தில் ரொமான்ஸ் செய்தது தவறு என ரசிகர்கள் இணையத்தில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால், நான்காவது நாளில் வார்னர் vs ஷாஹீன் அஃப்ரீடியின் மோதலை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.