மகளிர் பிக் பேஷ்: சிட்னி தண்டரை வீழ்த்தியது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
மகளிர் பிக் பேஷ் லிக் டி20 தொடரின் 8ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியில் கேப்டன் விலானி 3 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த லிசெல் லீ - ரேச்சல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் லீ 25 ரன்களில் ஆட்டமிழக்க, ரேச்சலும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய டு பிரீஸ் 33 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் டாமி பியூமண்ட் 4 ரன்களிலும், லிட்ஃபீல்ட் 25 ரன்களிலும், கேப்டன் ரேச்சல் ஹைனஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிரங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.