WCL 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸை வீழ்த்தியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியில் ஷர்ஜீல் கான் 12 ரன்களுக்கும், காம்ரன் அக்மல் 8 ரன்களுக்கும், உமர் அமின் 6 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் காளமிறங்கிய கேப்டன் முகமது ஹபீஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சோயப் மாலிக் ஒரு ரன்னிலும், ஆசிஃப் அலி 15 ரன்னிலும், மக்சூத் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஹபீஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அமர் யமின் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து சாம்பியன்ஸ் தரப்பில் கிறிஸ் ட்ரெம்லெட் மற்றும் லியாம் பிளங்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய சர் அலெக்ஸ்டர் குக் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் தலா 7 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் மஸ்டர்டுடன் இணைந்த இயன் பெல்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் மஸ்டர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: LIVE Cricket Score
பின் 58 ரன்களில் மஸ்டர்ட் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இயன் பெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 51 ரன்களையும், கேப்டன் ஈயான் மோர்கன் 16 ரன்களையும் சேர்த்த நிலையிலும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து சாம்பியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.