நாங்கள் கூடுதலாக ரன்களை சேர்க்க தவறவிட்டோம் - ஆரோன் ஜோன்ஸ்!

Updated: Thu, Jun 13 2024 08:56 IST
நாங்கள் கூடுதலாக ரன்களை சேர்க்க தவறவிட்டோம் - ஆரோன் ஜோன்ஸ்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியிலும் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 

ஆனாலும் அடுத்து இணைந்த சூர்யகுமார் யாதர் 50 ரன்களையும், ஷிவம் தூபே 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து தோல்வி குறித்து பேசிய அமெரிக்க அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ், “இப்போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஒருவேளை நாங்கள் இப்போட்டியில் 130 ரன்களை எடுத்திருந்தால் அது இந்திய அணிக்கு கடினமான இலக்காக மாறி இருக்கும். ஆனால் சில சமயங்களில் போட்டி இப்படித்தான் இருக்கும். இப்போட்டியில் எங்களது வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். 

மேலும் எங்களுடைய  பந்துவீச்சு குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இதைத்தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்காக செய்ய விரும்பினோம். இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து தற்போது நாங்கள் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்வதுடன், இதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுப்போம். இந்த மைதானமானது விளையாடுவதற்கு சவாலாக இருப்பதுடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகத்தை வழங்கி வருகிறது. 

இதன் காரணமாக தான் நாங்கள் இந்த ஆட்டத்தில் அதிகம் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. எங்கள் அணியின் மோனக் படேலுக்கு சிறிய காயம் ஏற்பட்டதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. இருப்பினும் எங்களுடை கடைசி லீக் ஆட்டத்திற்கு முன் அவர் முழு உடற்தகுதியப் பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை