IND vs SA: ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகளை விளாசியது குறித்து ருதுராஜ் ஓபன் டாக்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய தொடக்க வீரர் ருதுராஜ் 35 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து அசத்தினார்.
அது இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை பதிவு செய்திருந்தார் ருதுராஜ்.
இந்நிலையில், எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எதுவும் இல்லை என ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நோர்ட்ஜே வீசிய அந்த ஓவர் பவர்பிளேயின் ஐந்தாவது ஓவர். கூடுமான வரையில் அந்த ஓவரில் அதிக ரன்களை எடுக்க முடிவு செய்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டேன். ரன்களை குவித்தேன்.
அந்த ஓவரில் பத்து ரன்கள் வந்துவிட்டது போதும், இதோடு நிறுத்திக் கொள்வோம் என நான் எண்ணவில்லை. நான் விளையாட விரும்பும் இடத்தில் பந்து வந்தால், அதை அடித்து ஆடலாம் என முடிவு செய்திருந்தேன். அதனால்தான் ஆக்ரோஷமாக அந்த ஓவரை அணுகி இருந்தேன்" என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் நான்கு ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் 29 ரன்களை எடுத்தது இந்தியா.